கரூர்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?
|தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா? என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20-ந் தேதி தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அதில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.10 கோடி நிதி
முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மையம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறுபிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் உதவித் தொகை குறித்து, கரூரில் தேர்வு எழுத தயாராகி வரும் மாணவ-மாணவிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-
ஊக்கத்தொகையால் மகிழ்ச்சி
உப்பிடமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதேவி:- நான் கிராம பகுதியில் உள்ளேன். நான் கல்லூரி படிப்பு முடிந்து பல நாட்கள் ஆகிறது. அரசு தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு குறைவாக இருந்தது. தற்போது கரூர் மைய நூலகத்திற்கு வந்து இத்தேர்வுகளுக்கு படித்து வருகிறோம். இத்தேர்வுகள் குறித்த புத்தகங்கள், நடத்தப்படும் வகுப்புகள், பயிற்சி தேர்வுகள் ஆகியவற்றால் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து தற்போது தேர்வுக்கு முழுமையாக தயார் செய்து வருகிறோம்.
தேர்வில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். அரசு ஊக்கத்தொகை வழங்குவது மகிழ்ச்சி. இந்த ஊக்கத்தொகையானது தேர்வுகளுக்கு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும்.
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கோபிநாத்:-
போட்டித்தேர்வுகளுக்கு தற்போது தயாராகி வருகின்றோம். தமிழகத்தில் இருந்து குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போது மாணவர்கள் மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக விழிப்புணர்வு வர ஆரம்பித்துள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நண்பர்களுடன் சேர்ந்து தேர்வுகளுக்கு படித்து வருகிறோம். பட்ஜெட்டில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்து இருப்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இதனை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
தேர்வு பெறுவதற்கு வாய்ப்பு
புலியூரை சேர்ந்த விக்னேஷ்:-
மாணவர்களின் எதிர்காலம் என்பது இனிவரும் காலங்களில் போட்டி தேர்வுகளை நம்பியே உள்ளது. இச்சூழலில் அகில இந்திய குடிமை பணி தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாணவர்களுக்கான உதவித் தொகையாக அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகைகள் கிடைக்க பெற்றால், கிராமங்களில் இருந்தும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. போன்ற மத்திய அரசு போட்டி தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வரவேற்கிறேன்
வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பரத்:-
நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது வேலை வாய்ப்புக்காக போட்டி தேர்வுகளை எழுதி வருகிறேன். எனக்கு மத்திய அரசின் குடுமை பணி தேர்வான ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ். தேவை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை இருக்கிறது.
அதற்கு போதுமான வசதி இல்லாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் குரூப்-2, குரூப்-4 என எழுத தயார்படுத்தி வருகிறேன். மேலும் தற்போது மத்திய குடிமை பணி தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளேன். இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வின் மூலம் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதல்நிலை தேர்வு எழுத 10 மாதங்களுக்கு ரூ.7,500-ம், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். இதனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். பயனுள்ளதாக இருக்கும் தோகைமலை அருகே உள்ள நாகனூர் கிழக்கு களத்தை சேர்ந்த செந்தில்குமார்:-
எங்கள் பகுதியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து முடித்து விட்டு அரசு வேலைக்காக நிறைய தேர்வுகளை எழுதி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலனோருக்கு பணம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் குடிமை பணிக்காக வசதிகள் உள்ளவர்கள் மட்டும் சென்று வருதாக தெரிகிறது. ஏழை, எளிய தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் குடிமை பணிக்காக படித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள இந்திய குடிமை பணிக்காக மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெற்றிக்கு வாய்ப்பு
குடிமைப்பணியில் பாதுகாப்பு உற்பத்தி துறை சிறப்பு செயலாளர் பா.கிருஷ்ணமூர்த்தி:-
'நான் கடந்த 2002-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வு எழுதி அதில் பாதுகாப்பு துறையில் பணி இடத்தை பெற்று பணியாற்றி வருகிறேன். நாங்கள் படிக்கும் போது இதுபோன்ற நிதி உதவி திட்டங்கள் எதுவும் இல்லை. பெற்றோர்களை சார்ந்தே படித்து தேர்வுகளை எழுதினோம். இதுபோன்ற திட்டங்கள் அப்போது இருந்திருந்தால் விரைவாக வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றிருப்போம். பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் தற்போது மாணவர்களுக்கு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் நிதி உதவி திட்டம் வரவேற்கத்தகுந்தது. இதன் மூலம் மாணவர்கள் பலர் பயனடைவதுடன், தேர்வுகளிலும் அதிகம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது'.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.