சென்னை
வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
|பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 23-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் கண்காணிக்கவும், 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை தொடங்கி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியும், தூர்வாரும் பணிகள், இதரத் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.