< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வின் கோட்டையாக கள்ளக்குறிச்சி இருக்கும் வகையில் பணியாற்றுவேன்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தி.மு.க.வின் கோட்டையாக கள்ளக்குறிச்சி இருக்கும் வகையில் பணியாற்றுவேன்

தினத்தந்தி
|
1 Oct 2022 12:15 AM IST

தி.மு.க.வின் கோட்டையாக கள்ளக்குறிச்சி இருக்கும் வகையில் பணியாற்றுவேன் என்று மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்த கார்த்திகேயன் தினத்தந்தி நிரூபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை அதன் பொறுப்பு அமைச்சராக இருக்கும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் விடுக்கும் கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதனை நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்களும் தி.மு.க.விற்கு ஆதரவாக உள்ளனர்.

உழைப்பவர்களுக்கு உயர்வு

இத்தகைய சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக என்னை போட்டியின்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் முதல்-அமைச்சரின் ஆசியுடன் சிறப்பாக செயல்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றுமே தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் வகையில் எனது கழக பணி இருக்கும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கழக பணியை துடிப்பாகவும், சிறப்பாகவும் செய்த நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பதவிகள் வந்து சேரும். உழைப்பவர்களுக்கு கண்டிப்பாக உயர்வு இருக்கும். இதில் மாற்று கருத்து இல்லை. கழக நிர்வாகிகள் எப்பொழுதும் தங்களின் பணி கழக வளர்ச்சிக்காக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் சாதனைகளை கடைகோடி மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும், அரசின் அனைத்து திட்டங்களையும் பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையிலும் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்