சரிவர பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன்: துரைமுருகன் பேட்டி
|சரிவர பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கடிதம் எழுதி உள்ளேன். அதேபோல கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டி உள்ளேன். அண்டை மாநிலம் எங்களோடு பேசி இருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என்று எழுதியுள்ளேன்.
சரிவர செயல்படாதவர்களை மக்களவை தேர்தல் முடிந்ததும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன். யார் பணி செய்யவில்லையோ எடுத்துவிடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை. நான்தான் பொதுச்செயலாளர். மறுநாள் முரசொலியில் கட்டம் கட்டிவிடுவேன்.
ஒன்றிய செயலாளர்கள் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன். சரியாக இருந்தால் விட்டுவிடுவேன், இல்லை என்றால் தூக்கிவிடுவேன். மாற்றுக் கருத்து கிடையாது. முதலில் கட்சிதான். கொள்கையை பேசாமல் வாரிசு அரசியலை கூறி தேர்தலை பா.ஜ.க. சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.