விஜய்க்கு அரசியல் ஆலோசகராக மாட்டேன் - பிரசாந்த் கிஷோர்
|விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன். ஆனால் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன்" என்று தெரிவித்து உள்ளார்.