நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
|நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் என்றும், அதை தடுப்பவர்களை எதிரியாக நினைக்கிறேன் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசினார்.
கலந்துரையாடல்
'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் பெரு நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டி ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சிறந்து விளங்கிய தொழில் முனைவோருக்கு கவர்னர் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பெரிய அளவில் கனவு
இந்தியாவின் வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்கக்கூடாது. மக்கள் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாகவே இந்தியா இன்று பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் பெரிய அளவில் கனவு காண வேண்டும் என தற்போது தெரிவித்து வருகிறோம்.
தோல்வியை கண்டு யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். தோல்வியை கண்டு பலமுறை நான் அச்சம் கொண்டுள்ளேன். ஆனால், தோல்விதான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும். புதிய தொழில் முனைவோர்கள் அனைவரும் தேசத்தின் சொத்துகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய தொழில் முனைவோர்கள் தான் இந்தியாவின் நம்பிக்கை.
வளர்ச்சியை நோக்கி
கடந்த ஆட்சி காலத்தில் இருந்த நபர்கள் நம்மை பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டு சென்றனர். தற்போது நாம் அனைவரும் முன்னோக்கி நகர்கிறோம். இந்தியா நிச்சயம் வளர்ச்சி பெறும். நிச்சயம் நமக்கான இடத்தை நாம் அடைவோம். முந்தைய ஆட்சி காலத்தில் அரசு மூலம் மட்டுமே அனைத்தும் நடைபெற்று வந்தது. 130 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தொழில் முனைவோர்களின் பல்வேறு கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்து பேசியதாவது:-
எதிரியாக...
எனக்கு உள்ள ஒரே மதம், அது என்னுடைய நாடு. நாட்டின் வளர்ச்சிக்காக நான் எதை வேண்டும் என்றாலும் செய்வேன். அதனை தடுக்கும் நபர்களை நான் எதிரியாக நினைக்கிறேன்.
இந்தியாவை பார்க்கும்போது எனக்கு மனதில் மிகப்பெரிய வலி ஏற்படுகிறது. அதற்கு காரணம் இந்தியாவில் பல திறமைசாலிகள் உள்ளனர். இந்தியாவின் திறமைகளை வைத்தே வெளிநாடுகள் வளர்ச்சி அடைகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.