பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன் - அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
|எம்ஜிஆர் காட்டிய வழியில் அதிமுக பொதுக்குழு நடைபெற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஒ.பன்னீர் செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த சூழலில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் மேல்முறையீட்டு மனுவை சண்முகம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. இதனால் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. ஜூலை 11 ந்தேதி அதி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும்படி ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. மேலும் வழக்கை ஒத்திவைக்கை எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிபதிகள் வழக்கை வரும் 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எம்ஜிஆர் காட்டிய வழியில் அதிமுக பொதுக்குழு நடைபெற வேண்டும். அதிமுக தலைமை தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். நான் யாருக்கும் ஆதரவு இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன்" என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.