< Back
மாநில செய்திகள்
வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டினேன்
சேலம்
மாநில செய்திகள்

வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டினேன்

தினத்தந்தி
|
19 March 2023 7:30 PM GMT

அன்னதானப்பட்டி:-

சேலத்தில் பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டியதாக கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதல்

சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். மாதேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அங்கு பணிபுரிந்த கணவரை பிரிந்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து மாதேஸ்வரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, தாகூர் தெருவில் தனியாக வீடு எடுத்து ஷெகனாசுடன் வசித்து வந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

கணவரை பிரிந்த ஷெகனாசுக்கு 12 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாதேஸ்வரன், தனது கள்ளக்காதலி ஷெகனாசை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவர் அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்து, பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், ஷெகனாசும் தாகூர் தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். இதனிடையே ஷெகனாசின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. இதனால் நான் அவரை கண்காணித்து வந்தேன். அப்போது அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதனால் நான் ஷெகனாசை கண்டித்ததுடன், கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினேன். ஆனால் நான் வீட்டில் இல்லாதபோது அவர் வாலிபருடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை ஷெகனாசிடம் கேட்டேன். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த துண்டால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் அங்கிருந்து தப்பி சென்று, பழைய பஸ் நிலையம் அருகே வசித்து வரும் ஷெகனாசின் மகளிடம், அவளது தாயை கொலை செய்து விட்டதாக கூறினேன். பின்னர் அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாதேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்