< Back
மாநில செய்திகள்
தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி
மதுரை
மாநில செய்திகள்

தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி

தினத்தந்தி
|
19 Oct 2023 3:07 AM IST

தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறினார்


'கருவறை' என்ற குறும்படத்திற்கு இசை அமைத்ததற்காக, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் டெல்லியில் நடந்த விழாவில் தேசிய விருதினை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா, அங்கிருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி கைகளால் தேசிய விருதினை பெற்றிருக்கிறேன். இது பெருமையான தருணமாக இருந்தது. இதற்கு காரணமான, குறும்பட இயக்குனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதில் புதிய ராகங்களை பயன்படுத்தியதாக விருது வழங்கிய குழுவினர் தெரிவித்தனர். தேசிய விருதை யாருக்கு காணிக்கையாக்குகிறீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். இந்த விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். கடின உழைப்பை போட்டால் அது கண்டிப்பாக பலனளிக்கும். கடவுள் எல்லாவற்றையும் நமக்கு கொடுப்பார். எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்றுதான் உழைக்கிறோம். பொதுவாக, எல்லா கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். என்னுடைய 20 படங்கள் தேசிய விருதுக்காக சென்றிருக்கிறது. ஆனால், விருதுகள் கிடைக்கவில்லை. கருவறை படம் செய்யும்போது விருது கிடைக்கும் என நினைக்கவில்லை. நாம் தேடும் போது கிடைக்காத இந்த விருது, இப்போது கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மலேசியாவில் நடந்த சர்வதேச கோகோ போட்டியில் விளையாடி விட்டு மதுரை வந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜாய் நடாஷா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால சங்கர் ஆகியோரை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்