அரசியலில் நான் மௌன விரதம் கடைப்பிடிக்கிறேன் - நடிகர் எஸ்.வி.சேகர்
|திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலையில் நடிகர் எஸ்.வி.சேகர் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலையில் நடிகர் எஸ்.வி.சேகர் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரசியலில் நான் மௌன விரதம் கடைப்பிடிக்கிறேன். ஆனால் அரசியலுக்கு என்னை அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருக்கிறேன். நான் சார்ந்த கட்சி என்னை அழைத்தால் அவர்களுக்குதான் லாபம், அழைக்காவிட்டால் எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.
அரசியலில் ஒருவர் கருத்து சொல்லும் போது, அதனால் பிரச்சனைகள் வந்தால் அந்தக் கட்சி தான் அவரை பாதுகாக்க வேண்டும். வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடிதான் பிரதமராவார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இளம் தலைவராக இருந்து திறம்பட செயல்படுகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு வீடு தேசிய கொடிகளை ஏற்றுவது அனைவருக்கும் சுதந்திர உணர்வை வளர்க்கும். உலக நாடுகளில் இந்தியா போன்ற ஒரு சுதந்திர நாடு எங்குமில்லை. அனைத்து மக்களுக்கும் அளவு கடந்த சுதந்திரத்தை இந்தியா வழங்கி வருகிறது.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.