< Back
மாநில செய்திகள்
நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு படித்து வெற்றி பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி அறிவுரை
மாநில செய்திகள்

நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு படித்து வெற்றி பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி அறிவுரை

தினத்தந்தி
|
1 July 2022 11:39 AM GMT

எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு படித்து வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு அறிவுரை கூறினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 'கல்லூரி கனவு - நான் முதல்வன்" என்ற பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி கனவு வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

மாணவ செல்வங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற கையேட்டினை நன்கு படித்து தங்களுக்கு தகுந்த துறையினை தேர்ந்தெடுத்து உயர்கல்வி பயில வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெரிவித்துள்ளபடி நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு கல்வி கற்றால் சிறந்த வெற்றியாளர்களாக விளங்கிட முடியும்.

மாணவர்கள் உயர்கல்வி படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிடும் வகையில் கல்லூரி கனவு திட்டத்தின்கீழ் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகர்ப்புற மாணவர்களை போலவே ஊரகப்பகுதி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு இணையாக பெண்கள் இன்று கல்வி பயின்று வருவது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. எனவேதான் உயர்கல்வியில் பெண் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு என்பதற்கு ஒரு நற்சான்றாகும்.

மாணவ-மாணவிகள் படிக்கும்போதே சமத்துவ உணர்வு, சமுதாய உணர்வு, பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பிற்கேற்ற வேலையை தேடுங்கள், அதற்கான தகுதியை பள்ளி பருவத்திலேயே வளர்த்துக்கொள்ளுங்கள்.

படிப்பறிவோடு இல்லாமல் எல்லா அறிவுகளையும் பெற வேண்டும், முக்கியமாக போட்டித்தேர்வுகளை எழுதுவதில் ஆர்வம் செலுத்த வேண்டும். எனவே மாணவச்செல்வங்களாகிய நீங்கள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்டு நல்வழியை அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த துறையை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு பெறுவதோடு மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு தருபவர்களாகவும் திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்