கோயம்புத்தூர்
கொள்ளையடித்த ரூ.82 லட்சத்தை வைத்து கடனை அடைத்தேன்
|கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.82 லட்சம் பறித்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கடனை அடைத்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
கோவை, ஜூன்.15-
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.82 லட்சம் பறித்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கடனை அடைத்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
ரூ.82 லட்சம் கொள்ளை
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ் (வயது 53). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் விளாங்குறிச்சி ஜீவாநகர் அருகே வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த மனையில் தற்காலிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு மனைகளை விற்பனை செய்யும் புரோக்கராக நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற கென்னடி (45) செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஜீவாநகர் வீட்டுமனை அலுவலகத்திற்கு ரவிக்குமார் வந்தார். அப்போது மேலாளர் லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி, தாக்கிவிட்டு அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து லியோ மரியா இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
புரோக்கர் கைது
இந்த நிலையில் ரவிக்குமார், மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ரவிக்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
குடும்ப சூழ்நிலை காரணமாக நான் பலரிடம் கடன் வாங்கியிருந்தேன். இதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தரும்படி எனக்கு நெருக்கடி தந்தனர். இந்த நிலையில் நான் வேலை செய்யும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணம் இருப்பதை அறிந்தேன். எனவே அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.
கடனை திருப்பி செலுத்தினேன்
இதையடுத்து சம்பவத்தன்று ஒரு கடையில் ஆக்சா பிளேடு வாங்கிக்கொண்டு அலுவலகம் சென்றேன். அங்கு மேலாளர் லியோ மரியா இருதயராஜ் மட்டும் இருந்தார். வேறுயாரும் அங்கு இல்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, நான் மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடால் அவரை வெட்டி கீழே தள்ளினேன்.
இதில் அவர் காயத்துடன் கீழே விழுந்தார். இதையடுத்து அலுவலகத்தில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினேன். கொள்ளையடித்த பணத்தை கொண்டு நான் கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன்.
இதனிடையே போலீசார் என்னை தேடுவதை அறிந்ததும் அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க பாலத்துறை பகுதியில் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசாரணை
கைது செய்யப்பட்ட ரவிக்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இதனிடையே ரவிக்குமார் யார், யாரிடம் எல்லாம் கடன் வாங்கினார். கொள்ளையடித்த பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்து உள்ளார் என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரவிக்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணத்தை திருப்பி வாங்கியவர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி அழைத்து உள்ளனர். இதுதவிர சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.