< Back
மாநில செய்திகள்
வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
மாநில செய்திகள்

'வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர்' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

தினத்தந்தி
|
8 Sep 2023 6:41 AM GMT

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

அதேபோல, 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த இரு வழக்குகளும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, ஐ.பெரியசாமி, பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், "வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொண்டு சுத்தமாக வாருங்கள். கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்