எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் - அமீர்
|மது, விபசாரம், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை பின்பற்றுகிறவன் நான் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
சென்னை,
டெல்லியில் போதை பொருட்களை கைப்பற்றிய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தி.மு.க. நிர்வாகியான அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஜாபர் சாதிக் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்தையும் தயாரித்து வருகிறார்.
இதையடுத்து வழக்கில் அமீரை தொடர்புப்படுத்தி வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கு அமீர் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அமீர் வெளியிட்டுள்ள வீடியோவில் , '"என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்த பிறகும், சிலர் சமூக வலைதளங்களில் குற்ற செயல்களோடு என்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
மது, விபசாரம், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை பின்பற்றுகிறவன் நான். குற்றச் செயல்களை விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை விசாரணைக்கு அழைத்தாலும் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.