'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலை பாராட்டுகிறேன்' - நடிகர் சத்யராஜ் பேட்டி
|அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் தெளிவாக பேசியுள்ளார் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.
மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலுக்கு பாராட்டு தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் தெளிவாக பேசியுள்ளார். அவர் ஒவ்வொரு விவகாரத்தையும் கையாளும் விதத்தைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. அவருடைய சிந்தனை தெளிவுக்கும், கருத்தியல் ரீதியான தெளிவுக்கும், அவருடைய துணிச்சலுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.