ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்ககூடாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
|ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
எந்த மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்ககூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டாரப்பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்திட ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.
"தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது" பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பின்னரும் தமிழ்நாட்டில் புதிய கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானதாகும்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துவதை அனுமதிக்க கூடாது எனவும் முதல்-அமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.