4 பேருடன் சேர்ந்து கணவர் என்னை பலாத்காரம் செய்தார்... பழிவாங்குவதற்காக பொய் புகார் அளித்த பெண்
|4 பேருடன் சேர்ந்து கணவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னை,
சென்னை அடுத்த கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், 4 பேருடன் சேர்ந்து கணவர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், அந்த பெண்ணிடம் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனை பழிவாங்க பொய் புகார் கொடுத்ததாக அந்த பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கணவன் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைத்ததால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்ததால் அவரை பழிவாங்க இதுபோன்று பொய் புகார் கொடுத்ததாகவும் போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.