< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து கணவர் கவலைக்கிடம்... மனைவி தூக்குப்போட்டு தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து கணவர் கவலைக்கிடம்... மனைவி தூக்குப்போட்டு தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்

தினத்தந்தி
|
23 Jun 2024 4:18 PM IST

குடும்ப தகராறில் மனவேதனை அடைந்த பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 22). இவர் தோப்பூர் பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். பூபாலன் கடந்த ஓராண்டுக்கு முன்பு பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. ஆஸ்பத்திரியில் கணவரை உடன் இருந்து கவனித்து வந்த மேகலா திடீரென மாயமானார்.

அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது பழைய புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே உள்ள ஒரு மரத்தில் மேகலா தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, கணவரின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் எங்களிடம் கூறாமல் மேகலாவிடம் ஏன்? தெரிவித்தனர். கணவர் இறந்துவிடுவார் என்ற அச்சத்தில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். எனவே அந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்