கடலூர்
100 பவுன் நகை, ரூ.15 லட்சம்கொள்ளை போனதாக போலீசில் கணவர் புகார்
|கடலூரில் 100 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை போனதாக போலீசில் கணவர் புகார் தெரிவித்தார். அந்த பணத்தை செலவு செய்து விட்டு மனைவி, மகன் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் புதுச்சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62). அரிசி கடை உரிமையாளர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சுகாஷ் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். கடலூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில் நேற்று காலை பாலகிருஷ்ணன் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர், தனது வீட்டில் மகள் பள்ளிக்கு சென்று விட்டார். மனைவியும், மகனும் புதுச்சேரியில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு, மதியம் வந்து பார்த்த போது, வீட்டு கதவு திறந்து கிடந்ததாகவும், 100 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை போனதாகவும் எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் சென்று பார்த்தேன். அங்கு நகை, பணம் இல்லை. ஆகவே கொள்ளை போன நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகார் கூறினார்.
தடயங்கள் இல்லை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கொள்ளை போனதற்கான எவ்வித தடயங்களும் இல்லை. இருப்பினும் துணிமணிகள் சிதறி கிடந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு புதிய நபர்கள் யாரும் வரவில்லை என்று உறுதியானது.
தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில், பிரிட்ஜ் பிரீசர் பாக்சில் ரூ.1 லட்சம், சமையல் அறை அலமாரியில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம், 2 பவுன் மோதிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டுக்குள் சுற்றி, சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் துறை இணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் வந்து, தடயங்களை சேகரித்தனர். ஆனால் அங்கு குற்றம் நடந்ததற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்று தெரிந்தது.
இதையடுத்து பிரியதர்ஷினி, சுகாஷ் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பாலகிருஷ்ணன், தனது மனைவி, மகனுக்கு செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை. அத்தியாவசிய செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் பிரியதர்ஷினி, பட்டாம்பாக்கத்தில் உள்ள தனது அண்ணன் தங்கராசுக்கு வீடு கட்ட தாய் ரேணுகாம்பாள் மூலம் 20 பவுன் நகையை கொடுத்து வைத்துள்ளதாகவும், 5 பவுன் நகையை சொந்த செலவுக்காக அடமானம் வைத்துள்ளதாகவும், மீதி 2 பவுன் மோதிரத்தை பீரோவில் வைத்திருந்தாகவும், வீட்டில் இருந்த பணத்தில் ரூ.6 லட்சத்தை கடந்த 6 மாதமாக கொஞ்சம், கொஞ்சமாக அண்ணனிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பணத்தை செலவு செய்து நாடகம்
மேலும் மகனுக்கு மடிக்கணினி வாங்க ரூ.45 ஆயிரம், இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சத்து 609 ஆயிரம், செல்போன் வாங்க ரூ.40 ஆயிரம், கேமரா வாங்க ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தை தனது கணவருக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்து விட்டதாகவும், மற்ற செலவுக்கும் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
பணம் செலவானது கணவருக்கு தெரிந்தால் பிரச்சினை அதிகமாகி விடும் என்பதால், 2 பேரும் சேர்ந்து கொள்ளை நடந்தது போல் கதவு, பீரோ கதவை உடைத்தும், வளைத்தும், பீரோவில் இருந்த துணிமணிகளை அறை முழுவதும் சிதற விட்டும், மேஜை டிராயரை உடைத்தும் நாடகம் ஆடியதும் தெரிந்தது. கணவரை ஏமாற்ற சில கவரிங் நகைகளை வாங்கி வைத்திருந்ததும் தெரிந்தது. ஆனால் 100 பவுன் நகை வீட்டில் இல்லை என்றும், 27 பவுன் நகை மட்டுமே இருந்துள்ளது என்பது தெரிய வந்தது. இதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பிரியதர்ஷினி, சுகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே கடலூரில் தொடரும் திருட்டு, கொள்ளை நடந்து வந்ததால், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.