"விவாகரத்துக்குப் பின் மனைவியின் உடைமைகளை கணவன் வைத்திருக்க முடியாது" - கர்நாடக ஐகோர்ட் கருத்து
|விவாகரத்து பெற்ற பிறகு மனைவியின் பொருட்கள் அனைத்தும் கணவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
பெங்களூரு,
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், திருமணத்தின் போது, 9 லட்ச ரூபாய் வரதட்சணை மற்றும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் நகைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதனை விவாகரத்து செய்த போது தனது கணவர் திருப்பித் தரவில்லை எனவும் அதை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அந்த பெண்ணின் முன்னாள் கணவர் தரப்பில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது, அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து பயன்படுத்துகிறார் என்றும், விவாகரத்து பெற்ற பிறகு அந்த பொருட்கள் அனைத்தும் கணவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அதே போல் வரதட்சணையாக பணம் பெறுவது தவறு என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அந்த பெண்ணின் முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.