< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
18 Dec 2022 4:56 PM IST

திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவரும் செருக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி (18) என்பவரும் காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் தனியாக அகூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி மாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

திருத்தணி போலீசார் மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாலினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

போக்சோவில் கைது

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 21-9-2022 அன்று 17 வயது சிறுமியான மாலினியை திருமணம் செய்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அவரை பலமுறை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் மன விரக்தியில் இருந்த மாலினி தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது போக்சோ, குழந்தை திருமண சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விக்னேசை புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்