சென்னை
குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது - உடந்தையாக இருந்த சகோதரரும் சிக்கினார்
|குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த சகோதரரும் சிக்கினார்.
சென்னை புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 43). ஆட்டு தொட்டியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (36). எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிகள் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று அதிகாலை கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றவே, முருகன் ராஜேஸ்வரியை வீட்டில் இருந்த கத்தியால் மூன்று இடங்களில் வெட்டியுள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் ராஜேஸ்வரியை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து முருகன் மற்றும் முருகனின் அண்ணன் ராமச்சந்திரன் (56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் ஆவடி அடுத்த கோயில்பதாகை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (27). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து மற்றும் சூர்யா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு கோவில்பதாகை மசூதி பின்புறம் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தின் தலையின் பின்பக்கமாக வெட்டியுள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த பிரசாந்த் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து (28) என்பவரை கைது செய்தனர்.