தென்காசி
பெண் கொலையில் கணவர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
|தென்காசியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்
தென்காசி நடுமாதாங் கோவில் தெருவை சேர்ந்த கோமதிநாயகம் மகன் சந்திரன் (வயது 55). இவரது மனைவி சித்ரா (50). பீடி சுற்றும் தொழிலாளி.
பெண் கொலை
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது வீடு 2 நாட்களாக பூட்டப்பட்டு இருந்தது. இந்த வீட்டிலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தவர் இதுகுறித்து பேசி வந்தனர். தகவல் அறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தபோது வீட்டில் சித்ரா கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் சித்ராவின் கணவர் சந்திரன் கொலை செய்தது தெரியவந்தது. அவரைத் தேடிப் பார்த்தபோது அவர் நேற்று திருச்செந்தூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரிடம் சந்திரன் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளேன். தற்போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் எனது மனைவி சித்ரா என்னை அடிக்கடி வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்தாள். மேலும் நான் அவளிடம் செலவுக்கு பணம் கேட்கும் போது பணம் தர மறுத்து விடுவாள். இதனால் எனக்கு அவள் மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 19-ந் தேதியும் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 20-ம் தேதி அதிகாலை அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவளுக்கு ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்கான மாத்திரையை கூடுதலாக அவளுக்கு இரவில் கொடுத்தேன். இதில் அவள் மயங்கி இருந்தாள்.
இந்த நிலையில் அவளை கட்டிலில் துணியால் கை, கால்களை கட்டினேன். பின்னர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவளது கழுத்தை அறுத்தேன். அவள் சத்தம் போட்டு எழுந்திருக்க முயன்றாள். நான் கட்டிலில் கட்டி இருந்ததால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் இறந்து விட்டாள். இதன் பிறகு நான் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு திருச்செந்தூர் சென்று விட்டேன். எனது மைத்துனர் பேசும் போது சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான சந்திரன் தென்காசி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொலை நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளிலேயே குற்றவாளியை தென்காசி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.