< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலி

தினத்தந்தி
|
24 April 2023 12:15 AM IST

ராசிபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் கணவன், மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

ராசிபுரம்

விவசாயி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையம் ஊராட்சி மூலக்காடு குமாரபாளையத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). விவசாயி. இவருடைய மனைவி கீதா (39). இவர்களுக்கு பிரதீவ் என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சிவக்குமார் தனது நிலத்தில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

தற்போது செடிகளில் தக்காளி காய் பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் கோடை மழையால் சேதமடையாமல் இருக்க குச்சிகளை நடுவதற்கு அவர் திட்டமிட்டார். இதற்காக நேற்று டிராக்டரில் குச்சிகளை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

சிவக்குமார் டிராக்டரை ஓட்டிச்செல்ல மனைவி கீதா அவருடன் அருகே உட்கார்ந்து சென்றார். பின்னர் குச்சிகளை தோட்டத்தில் இறக்கி வைத்து விட்டு வீட்டிற்கு செல்ல டிராக்டரில் ஏறினர்.

கணவன், மனைவி பலி

அப்போது கணவருக்கு பதிலாக டிராக்டரை கீதா ஓட்டி உள்ளார். அந்த பகுதியில் நேற்று பெய்த மழையால் மண்பாதை சேறும், சகதியுமாக இருந்ததால் அதில் வந்த டிராக்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் சென்றுவிட்டது. இதில் நிலைதடுமாறி டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிவக்குமார் மற்றும் கீதா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தி 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமார், கீதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்