< Back
மாநில செய்திகள்
செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு
சென்னை
மாநில செய்திகள்

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
28 March 2023 11:56 AM IST

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கணவன்-மனைவி, ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் பகத்சிங். இவர், ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் முருகேசன் (வயது 45). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு பத்மஸ்ரீ (16) என்ற மகளும், புனிதன் (14) என்ற மகனும் உள்ளனர்.

முருகேசன் பங்கு சந்தையில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

முருகேசனின் தந்தை பகத்சிங்கிற்கு சொந்தமான வீடு ஒன்று செங்குன்றத்தை அடுத்த எல்லம்மன்பேட்டை சீனிவாசன் நகர் பெருமாள் கோவில் தெருவில் உள்ளது. அந்த வீட்டை சுத்தம் செய்துவிட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு முருகேசன், தனது மனைவி ஜெயந்தியுடன் நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததாலும், அவர்களை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்காததாலும் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் உள்ளே முருகேசன்-ஜெயந்தி இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த முருகேசன்-ஜெயந்தி தம்பதி, தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த வீட்டுக்கு வந்து பின்னர் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்