குலசேகரம் அருகே கணவன்-மனைவி தற்கொலை - போலீசார் விசாரணை...!
|குலசேகரம் அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே சூரியகோடு முள்ளங்குழி விளையைச் சேர்ந்தவர் ஜாண் ஐசக் (வயது 40) பிளம்பிங் தொழில் செய்து வந்த இவரது மனைவி சந்தியா(34). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கணவன் ஜாண் ஐசக் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் கடன் சுமை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மணவாளக்குறிச்சி அழகன்பாறை தட்டான்விளையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாயுடன், சூரியகோடு அருகே கோட்டூர்கோணம் கீழவிளையில் வசிக்கும் சந்தியாவின் தாய் காந்தியின் வீட்டிற்குச் சென்று, சந்தியா தன்னை திருமணம் செய்தாக கூறி ரூ.30 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார். பணத்தை திருப்பி தராவிட்டால் போலீசில் புகார் கொடுப்பதாக கூறி தகராறு செய்து உள்ளார்.
இதையடுத்து மகள் சந்தியாயை அவரது தாய் செல்போனில் அழைத்துள்ளார். அப்போது செல்போன் எடுக்கப்படாத நிலையில் நேரடியாக சந்தியாவின் வீட்டிற்கு சென்றார். வீடு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்து உள்ளார்.
அப்போது மகள் சந்தியா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், மருமகன் ஜாண் ஐசக் விஷம் குடித்து கட்டிலில் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து குலசேகரம் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன்-மனைவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.