நீலகிரி
தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
|வயநாடு அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
வயநாடு அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலையில் கடந்த வாரம் அரசு அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு கம்பமலை அருகே தலப்புழா பகுதியில் உள்ள 2 பேரின் வீடுகளுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பறித்து சென்றனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் கம்பமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தனர். அவர்களை உள்ளூர் மக்கள் எதிர்த்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மாவோயிஸ்டுகள் திரும்பி சென்றனர். அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், கேரள தண்டர்போல்ட் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்களிடம் விசாரணை
இதற்கிடையில் வயநாடு மாவட்டம் அருகே நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை நீலகிரி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது தவிர அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் சந்தேக நபர்கள் யாரேனும் வந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவ்வாறு யாரேனும் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.