கள்ளக்குறிச்சி
கரும்பு தோட்டத்தில் மனித எலும்புக்கூடு
|கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு கரும்பு தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கொலையா? போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரியபெருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு மகன் கதிரவன். இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது வயலில் எலும்பு கூடு ஒன்று கிடந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கதிரவன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் நர்கீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து எலும்பு கூட்டை பார்வையிட்டனர். அதன் அருகில் நீல நிற லுங்கி ஒன்று கிடந்ததால் அந்த எலும்பு கூடு ஆண் நபரின் எலும்பு கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அந்த எலும்பு கூடை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் எலும்பு கூடாக கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து உடலை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அருகில் உள்ள பாம்புதோட்டம் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி(வயது 75) என்பவர் கடந்த 1-6-2022 முதல் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் எலும்பு கூடாக கிடந்தவர் அய்யாசாமியா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.