< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டம்

தினத்தந்தி
|
25 March 2023 2:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முபாரக்அலி, ஜோசப்சேவியர் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் தமிழ்கண்ணன், பழனிச்சாமி, கிருஷ்ணதாஸ், குழந்தைராஜ், ஜெசி உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற அனைவரும் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

பழனி, நத்தம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் பழனியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது ஆசிரியர் சங்கங்கத்தினர், அரசு ஊழியர் சங்கத்தினர் என பலர் புதுதாராபுரம் சாலையோரம் கைகோர்த்து வரிசையாக அணிவகுத்து நின்றனர். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோல் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாக்கிளி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நத்தம் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி, வேடசந்தூர்

சாணார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜிேயா அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட்பால்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சத்துணவு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜான்பீட்டர், ஜெயக்குமார், கேந்திர மூர்த்தி, முருகேசன், ராஜா, பச்சமுத்து, சுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஆத்துமேடு நான்கு ரோடு முதல் திண்டுக்கல் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரம் கைகளை கோர்த்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்