தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்
|சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளனர்.