< Back
மாநில செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

தினத்தந்தி
|
25 March 2023 2:01 PM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தமிழக அரசின் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாததால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதனை அடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் திருத்தணியில் உள்ள தனியார் தியேட்டர் அருகே நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மில்கி ராஜா சிங், லோகையா ஆகியோர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.

இதைபோல் பொன்னேரியில் உள்ள அரசினர் கல்லூரி முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் காத்தவராயன், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் ஜவகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்