< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்
|17 Aug 2023 12:34 AM IST
திருவெறும்பூர் அருகே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
'நீட்' தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனை அடைந்த அவரது தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் மாணவ-மாணவிகளும் போராடி வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும், நாங்குநேரி பிரச்சினையில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.