கடலூர்
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
|கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வடலூரில் 12-ந் தேதி நடக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். எனவே இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04142-290039, 94990 55908 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளலாம். எனவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 12-ந் தேதி நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.