< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு - போக்குவரத்து துண்டிப்பு
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு - போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
20 Nov 2022 5:10 PM IST

மதுரவாயலில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 144-வது வார்டுக்கு உட்பட்ட மதுரவாயல், மேட்டுக்குப்பத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக மேட்டுக்குப்பம் சாலை அமைந்துள்ளது. நேற்று காலை திடீரென இந்த சாலையின் ஒருபகுதி உள்வாங்கியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்துவந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் செல்லாத வகையில் பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து, அதில் பச்சை துணியை கட்டி வைத்துவிட்டு சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அந்த பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் பணிக்காக பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. சமீபத்தில் அந்த பணிகள் முடிக்கப்பட்டு தார் சாலை போடப்பட்டது. ஆனால் பள்ளத்தை சரியாக மூடாமல் அதன்மீது தார் சாலை அமைக்கப்பட்டதால்தான், சாலை உள்வாங்கி ராட்சத பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் பள்ளம் விழுந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சீரமைக்காமல் பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு மட்டும் அமைத்து சென்றுவிட்டனர். இது சாலையின் நடுவில் ரவுண்டானா போல் காட்சி அளிக்கிறது. சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தால் அந்த பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டியது இருப்பதால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்