கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
|கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில், கனக சபையில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னையை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தா்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்
தமிழக அரசின் அரசாணை, உச்சநீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தால், தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும். தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் உச்சநீதிமன்றத்தை நாடவில்லை என்றும், மூன்றாம் நபர், தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக பொது நலன் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இறுதியில் கனகசபை தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பி கனகசபையில் தரிசிக்க அனுமதியளித்த அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.