சேலம்
கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது எப்படி?
|கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸ் விசாரணையில்பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸ் விசாரணையில்பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்லூரி மாணவி கொலை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கொலையாளி கல்லூரி மாணவர் சாமிதுரை என்பதும், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும், ஒரு தலைக்காதலால் ரோஜாவை கொலை செய்ததும் தெரிய வந்தது.
அக்காள் பரபரப்பு தகவல்
கொலை தொடர்பாக ரோஜாவின் அக்காள் நந்தினி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே கொலையை நேரில் பார்த்த நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது போலீசாரிடம் நந்தினி பரபரப்பு தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:-
நான், என்னுடைய தந்தை முருகேசன், தாய் ஜெயா, தங்கை ரோஜா, தம்பி விஜய் ஆகியோர் கூடமலை- கடம்பூர் சாலையில் மலைஅடிவாரத்தில் வசித்து வந்தோம். எங்களது வீட்டின் அருகில் விவசாய நிலம் உள்ளது. என்னுடைய தந்தை விவசாயம் செய்து கொண்டே எங்களை படிக்க வைத்தார்.
நான் நர்சிங் படிப்பை முடித்து விட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய தங்கை ரோஜா, ஆத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தம்பி விஜய் தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான்.
13-ந் தேதி திருமணம்
எனக்கு வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வந்தது. என்னுடைய உறவினர்களுக்கு பெற்றோர் பத்திரிகை கொடுத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் நான் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். காபி போடுவதற்காக சமையல் அறையில் நின்று ெகாண்டிருந்தேன்.
அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து என்னுடைய தங்கை ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டது. நான் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போது, எங்கள் ஊரை சேர்ந்த சின்னதுரையின் உறவினர் சாமிதுரை என்பவர் அங்கிருந்து ஓடியதை கண்டேன்.
பரிதாப சாவு
பின்னர் என்னுடைய தங்கையின் அலறல் சத்தம் கேட்ட இடத்துக்கு ஓடினேன். அங்கு அவள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் நானும் கதறி அழுதேன். என்னுடைய அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் ரோஜாவை மீட்டு கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றோம். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவ்வாறு நந்தினி போலீசாரிடம் கூறினார்.
ஒரு தலைக்காதல்
உடனே போலீசார் சாமிதுரை தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன்தான் சாமிதுரை என்பதும், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவர், கூடமலைக்கு பெரியப்பா சின்னதுரை வீட்டுக்கு வந்து செல்லும் போது ரோஜா மீது காதல் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவரை ஒரு தலையாக காதலித்து வந்ததும் தெரிய வந்ததது.
தன்னுடைய காதலை சாமிதுரை கூறினாலும், ரோஜா அதனை ஏற்க மறுத்து வந்ததாகவும் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜா கல்லூரி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது அங்கு வந்த சாமிதுரை, அவரிடம் தன்னை காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் கல்லூரி பஸ் வந்ததும் ரோஜா அதில் ஏறி சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த ரோஜாவின் பெற்றோர், சாமிதுரையை கண்டித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
தீர்த்துக் கட்டிய பயங்கரம்
3 ஆண்டுகளாக காதலித்தும் தனது காதலை ஏற்காத ரோஜாவை தீர்த்துக்கட்ட சாமிதுரை முடிவு செய்து தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் கூடமலைக்கு சென்றுள்ளார். நண்பர்களை சிறிது தூரத்தில் நிற்க வைத்து விட்டு அவர் மட்டும் ரோஜாவின் வீட்டு அருகே பதுங்கி இருந்துள்ளார். மாலையில் தோட்டத்துக்கு வந்த ரோஜாவிடம் தன்னுடைய காதலை ஏற்கும்படி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
அவர் மறுப்பு தெரிவிக்கவே ரோஜாவுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி தான் ஒரு பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். உடனே ரோஜா சாதுர்யமாக செயல்பட்டு அங்கு கிடந்த தோட்டத்து சேற்றில் விழுந்து உருண்டு புரண்டார்.
மேலும் ஆத்திரம் அடைந்த சாமிதுரை, அங்கு கிடந்த கல்லை தூக்கி ரோஜாவின் தயில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரோஜா வலியால் அலறி துடித்துள்ளார். தங்கையின் அலறல் சத்தம் கேட்டு நந்தினி அங்கு ஓடி வந்துள்ளார். அப்போது சாமிதுரை அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதனை நந்தினி பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உறவினர்களிடம் விசாரணை
இந்த கொலை தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாமிதுரை சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் ஒரு தனிப்படை சென்னைக்கு விரைந்துள்ளது. கொலை நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் 2-வது தனிப்படை மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இன்னொரு தனிப்படை சாமிதுரையின் சொந்த ஊரான ஆத்தூர் பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
4-வது தனிப்படை போலீசார், சாமிதுரையின் பெரியப்பா சின்னதுரை, பெரியம்மா, சுதா, சின்னதுரையின் மகன்கள் கோபிநாத், வினோத், அத்தை ராஜம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடல் அடக்கம்
இதற்கிடையே ரோஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பின்னர் உடல் கூடமலையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை, இன்னொரு கல்லூரி மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.