< Back
மாநில செய்திகள்
ஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு  கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?
மதுரை
மாநில செய்திகள்

ஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?

தினத்தந்தி
|
8 Nov 2022 1:46 AM IST

நிதி சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்த வழக்கில் ஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோருவது பற்றி ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நிதி சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்த வழக்கில் ஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோருவது பற்றி ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்மார்ட்போன் கடன் செயலி

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பிரதமர் தெரிவித்ததை போல தற்போது நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தற்போது வங்கிகள் அல்லாத நிறுவனங்களும், பொதுமக்களுக்கு கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆவணங்கள் சமர்ப்பித்து, பலமுறை அலைந்து கடன் பெற வேண்டும். ஆனால் தற்போது நமது ஸ்மார்ட்போன் மூலமாக விரைவாக கடன் பெற முடிகிறது.

சமீபகாலமாக பல்வேறு நிதி நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கி, அதன் மூலம் கடன் வழங்கி வருகின்றனர்.

மோசடிகளால் பலர் பாதிப்பு

இந்த செயலிகள் மூலம் கடன் வழங்குவதை நம்பி பலர் தங்களது பணம், சொத்து ஆகியவற்றை இழக்கின்றனர்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களை குறி வைத்து இது போன்ற கடன் செயலி மோசடி நடைபெறுகிறது.

போலியான ஸ்மார்ட்போன் கடன் செயலிகளை உருவாக்கி அதிக வட்டி, தேவை இல்லாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கின்றனர். ஸ்மார்ட்போன் செயலி மூலம் கடன் பெறுபவரின் மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்கின்றனர்.

கடும் நடவடிக்கை

பின்னர் புகைப்படங்களை மார்பிங் செய்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனால் தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன. நாடு முழுவதும் இதுபோன்ற நிதி குற்றம் அதிகமாகிறது.

இதனை தடுக்க கடன் செயலிகளுக்கு பதிவு எண் வழங்கவும், விதிமுறைகளை உருவாக்குவது என கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் இந்த வழக்கு குறித்தும், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்