அரியலூர்
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
|காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.
வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.
பாலியல் குற்றங்கள்
இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளில்
சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
தா.பழூர் பள்ளி ஆசிரியர் குணசேகரன்:- பெண் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர் அவர்களை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வளர் இளம் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் மாணவிகளை வீடுகளில் தொடர்ந்து கண்காணிப்பதோடு அவர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எந்த தயக்கமும் இன்றி பெற்றோர்களிடம் கூறுவார்கள். அதுபோல் பள்ளி கல்லூரிகளில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள 1098 தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் கொடுப்பதற்கும், பள்ளி கல்லூரிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள புகார் பெட்டி மூலம் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பள்ளி கல்லூரி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கவும் மாணவிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதனை தைரியமாக பயன்படுத்த அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதுபோல் பள்ளி கல்லூரி அளவில் மனோதத்துவ நிபுணர்கள், அனைத்து மாணவ-மாணவிகளோடும் இணக்கமாக பழகும் ஆசிரியர்கள் அடங்கிய நம்பிக்கை குழு அமைக்க வேண்டும். அவர்களை அணுகி புகார் தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை அந்த குழு மேற்கொள்ளும் வகையில் திட்டமிடலாம். பள்ளிப் பருவத்திலேயே எதிர்காலத்தில் அவர்கள் பாலியல் ரீதியாக எதிர் கொள்ளவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தனிப்பாடல்கள் அல்லது வகுப்புகள் நடத்தி அவர்களை கவனமாக இருக்கும்படி செய்யலாம். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவு மலிந்து விட்ட காரணத்தினால் அவர்களுக்கு அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றின் பயன்பாட்டை தேவைக்கு ஏற்ப சுருக்கிக் கொள்வதற்கு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கலாம். இதன் மூலம் மாணவிகள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்குவார்கள்.
ஒழுக்கம் நிறைந்த மாணவ சமுதாயம்
விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன்:- இன்றைய நவீன உலகில் மாணவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணங்களாக இன்றைய நவீன உலகில் திகழ்வது ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற நவீன சாதனங்கள் மாணவர்கள் குற்றங்கள் புரிவதற்கு உதவுகின்றன. பெற்றோர்கள் மேற்கண்ட சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான வழிவகைகளை காண வேண்டும். மேலும் நன்னெறி கல்வியை போதிப்பது, கலந்தாய்வுகளை ஏற்படுத்துதல், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்வதோடு மாணவர்கள் சிறு, சிறு தவறுகளை செய்கின்ற பொழுதே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதனை கண்டித்து பிள்ளைகளை திருத்துகின்றபோது எதிர்கால, சிறந்த ஒழுக்கம் நிறைந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இதன்மூலம் பாலியல் குற்றங்கள் உடனே தானாகவே குறைய ஆரம்பித்து விடும்.
நட்பு ரீதியில் பழகவில்லை...
தா.பழூரை சேர்ந்த குடும்ப தலைவி கயல்விழி:- பெண் பிள்ளைகளுக்கு பருவம் ஏதும் வயதில் பாலியல் ரீதியான மாற்றங்கள் துவங்கும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் எல்லா வயது குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் உள்ளன. சமீப காலங்களில் வாய் பேச முடியாத குழந்தை பருவத்திலேயே தனக்கு என்ன நேர்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு பாலியல் ரீதியான தொந்தரவுகளை குழந்தைகள் அனுபவிக்க தொடங்கி விட்டன. இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை முதலில் தங்கள் பெற்றோரிடமே தெரிவிக்க விரும்புவார்கள். ஒருவேளை பெற்றோர்கள் அவர்களோடு நட்பு ரீதியில் பழகவில்லை என்றால் அவர்களிடம் சொன்னால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்கிற அச்ச உணர்வு தங்களின் பிரச்சினைகளை பெற்றவரிடம் சொல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும். எனவே எந்த நிலையிலும் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உற்ற தோழமையாகவே இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் தற்காப்பு கலைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அதைவிட அதிகமாக இந்த சமூகத்தில் ஏற்பட்டு வரும் நவீன கால பாலியல் ரீதியான சீர்கேடுகளை இலை மறை காயாக ஆனால் புரிந்து கொள்ளும் அளவுக்கு பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும். பாலியல் சீண்டல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்தும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உடை கட்டுப்பாடுகள்
அரியலூரை சேர்ந்த கவிதா நிதி:- பாலியல் துன்புறுத்தல் என்பது பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்ல பெண்கள் பணிபுரியும் இடத்திலும் உண்டு. பெண்களின் உடை நாகரீக செயல்பாடு சாதிய பாகுபாடு மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவல் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்க காரணமாக ஏதுவாக அமைந்து விடுகிறது. முற்காலத்தில் ஆண், பெண் இரு பாலர்களுக்கும் சமுதாய ஒழுக்க கட்டுப்பாடுகள் உடை கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவ்வாறு இல்லை. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை மிகவும் கடுமையாக கொண்டு வந்தாலும் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு இருந்தாலும் தனி மனித ஒழுக்கங்களும் சுய கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே பெண்களை பாலியல் துன்புறுத்தலிருந்து பெண்களை பாதுகாக்க முடியும்.
பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்
அரியலூரை சேர்ந்த பேராசிரியர் சிற்றரசு:- கல்வி என்பது நல் ஒழுக்கங்களை கற்றுக்கொள்வது நற்பண்புகளை கற்றுக்கொள்வது, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வது, நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்ல மரியாதையை கற்றுக்கொள்வது அடக்கத்தை கற்றுக்கொள்வது, பணிவினை கற்றுக்கொள்வது ஆக ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அது தீயவற்றை நீக்கி நல்லவற்றை கற்றுக்கொள்வதாக சென்ற நூற்றாண்டு வரை இருந்தது. இன்றைய நிலையில் கல்வி என்பது மதிப்பெண் சார்ந்ததாகவும் பணம் சம்பாதிப்பதற்கான ஒன்றாகவும் மாறிவிட்டது. ஓதலினும் மிகச்சிறந்தது ஒழுக்கம் என்ற உண்மைதனை மாணவர்கள் உணர்தல் வேண்டும் என்னும் கொள்கை இன்று மரணித்து விட்டது. அந்த சூழ்நிலையில் கல்வி பயின்றவர்களே இன்று ஆசிரியர் பணியில் உள்ளனர். அகப்பகை புறப்பகை என பகை இரண்டு வகைப்படும். மனிதன் விலங்கு பாம்பு முதலான பிற உயிரினங்கள் புறப்பகை எனப்படும். இவற்றை வெற்றி காணுதல் எளிது. உள்ளத்தில் இருக்கின்ற காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் அகப்பககை இந்த பகையை வெல்வது கடினம் இந்தப் பகையை வென்றவனை திருவள்ளுவர் பேராண்மை உடையவன் என பாராட்டுகிறார். இந்த பேராண்மை திறனை பெற சென்ற இடந்தார் செலவிடாது தீதொரீஇ நன்றின் பால் உய்பது அரிது என்ற வள்ளுவனின் அறிவுரைப்படி மனத்தை தீய வழிகளில் செல்லாது தடுத்து நல்லவற்றை மட்டும் செலுத்தும் வலிமையை ஆசிரியர் மாணவர் இருவருமே பெற வேண்டும். அதற்கு வேண்டாம் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்ற பழைய பாடங்கள் மீண்டும் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். ஆசிரியர் மாணவனை தண்டிக்கவும், கண்டிக்கவும் உரிமை பெற வேண்டும் அப்போதுதான் இன்றைய மாணவர்கள் நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒழுக்கம் உடையவராக விளங்குவர். அப்போதுதான் இன்றைக்கு பெரிய சமுதாய சீர்கேடாக ஒழுக்க கேடாக உள்ள பாலியல் சீண்டல்கள் ஒளியும். இல்லையேல் அது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிடும்.
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்
பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர் நடராஜ்:- பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை தங்களது பிள்ளைகளாக நினைத்து பழக வேண்டும். மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குவதுபோல் மாணவ-மாணவிகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து நல்ல பல அறிவுரைகளை வழங்க வேண்டும். மாணவ-மாணவிகள் சிறு தவறு செய்தாலும் பெற்றோர்களை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடக்காமல் அன்பாக பழக வேண்டும். பள்ளிகளில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பெற்றோர்கள் கேட்டு அறிய வேண்டும். இதுபோன்று பெற்றோர்கள் அன்பாக நடந்து கொண்டால் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அரியலூர் கருணாநிதி:- பள்ளி, கல்லூரிகளில் பாலியல் சீண்டல் என்பது இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாக அனுதினமும் நடந்து வரக்கூடிய ஒரு அவலமான சூழ்நிலையாக ஆங்காங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. கல்வியினை போதிக்கும் ஆசிரியர்களிடத்தே நாம் உயர்ந்த குரு ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் போனது ஏனோ கலிகாலத்தின் அவலம் அதனை போலவே மாணவ-மாணவிகளும் இளம் வயதிலேயே மீடியாக்களை பார்த்து எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவலமான ஆர்வம். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளிடம் 24 மணி நேரத்தில் ஒரு 2 மணி நேரமாவது அவர்களோடு அமர்ந்து பேசி பழகி அன்றைய நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதது. கொடுமையிலும் கொடுமை எங்கே அன்பு கிடைக்குமோ அங்கே தலை சாயிவது மனித இயல்பு. அந்த வாய்ப்பினை மாணவ- மாணவிகளும் அன்பு செலுத்துவதாக நடிக்கும் கல்வி நிறுவனத்தாரிடம் ஏமாந்து தோற்றுப்போகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. எல்லோரும் கெட்டவர்கள் இல்லை கெட்டவர்களால் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் மாணவ சமூகத்தின் அவலங்களை குறிப்பிட வேண்டியது நம்முடைய கடமை நல்லவர்கள் நமக்கே வம்பு என ஒதுங்கி செல்வதை இனிமேலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். தட்டிக்கேட்கக் கூடிய தைரியத்தை அவர்களுக்கு வரவழைத்தால் பாதி அவலங்கள் குறைந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.