பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு வழங்குவது எப்படி? - தமிழக அரசு ஆலோசனை
|இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா். அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.