பட்டா, பத்திரங்கள் இல்லாமல் கிராமங்களில் நிலத்திற்கான சர்வே எண்ணை தெரிந்து கொள்ளலாம்- எப்படி தெரியுமா?
|பட்டா, பத்திரங்கள் இல்லாமல் கிராமங்களில் வீடு-நிலத்திற்கான சர்வே எண்ணை இனி எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதற்கான வில்லேஜ் மாஸ்டர் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது.
சென்னை,
ஒரு சொத்தின் அடையாளமாக நாம் தெருவையும், அதில் உள்ள நம்பரையும் கூறுவோம். ஆனால் அரசின் வருவாய் பதிவேட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சர்வே எண்ணும், அதன் உட்பிரிவு எண்ணும் இருக்கும். அது தான் அந்த நிலம் மற்றும் வீட்டின் உண்மையான அடையாளம். அதன் அடிப்படையில் தான் பத்திரப்பதிவுகள் எல்லாம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சர்வே எண்ணை நாம் நமது பதிவு பத்திரங்கள் அல்லது பட்டா ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த சர்வே எண் இல்லாவிட்டால், நில விவரங்களை நம்மால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. இந்த சர்வே எண்கள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான் பல்வேறு நில மோசடிகள் அரங்கேறி வருகிறது.அரசும், பல்வேறு கிடுக்கிபிடிகள் போட்டாலும் நில மோசடிகள் மட்டும் குறைந்த பாடில்லை
உதாரணமாக ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். இப்படி பல்வேறு மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நில சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தனி இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் அரசு நிலங்கள், கோவில் நிலங்கள், நீர் நிலை மற்றும் வன பகுதிகள் நிலங்கள் ஆகியவற்றில் போலி விற்பனையை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அந்த சர்வே எண்கள் விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து நில மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் https://tngis.tn.gov.in/apps/village- dashboard/படம்: என்ற வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது.
கூகுள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். பின்னர் அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
தற்போது இந்த வில்லேஜ் மாஸ்டர் இணையத்தில் கிராமங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களின் சர்வே எண்ணை மட்டுமே தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. நகர்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட வில்லை. ஆனால் நகர்புறங்களுக்கும் கொண்டு வந்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.
446 கோடி சர்வே எண்கள்
தமிழகத்தில் மட்டும் பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில் வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டும் இப்போது கொடுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண்பிக்கப்படுகிறது. மேலும் அதில் வன பகுதி, தீவுகள், மலைகள் ஆகிய இடங்கள் குறித்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரின் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்கள் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
ஜி.பி.எஸ். வசதி வேண்டும்
கூகுள் மேப் போல் இருக்கும் வில்லேஜ் மாஸ்டர் வரைப்படத்தில் நமது இடத்தை முதலில் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதன் மூலம் நமது சர்வே எண்ணை தெரிந்து கொள்ளலாம். அதனை இன்னும் எளிதாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது கூகுள் மேப் மூலம் நாம் தெருவில் நிற்கிறோம், எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதனை ஜி.பி.எஸ். மூலம் எளிதாக தெரிந்து கொள்கிறோம். அதே போல் வில்லேஜ் மாஸ்டருக்கு என்று அரசு ஒரு தனி செயலி கொண்டு வர வேண்டும். அதில் ஜி.பி.எஸ்.வசதியை ஏற்படுத்தி கொடுத்து, அதன் மூலம் நாம் நிற்கும் இடத்தின் சர்வே எண்ணை எளிதாக தெரிந்து கொள்ளும் வசதியை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் போலி சர்வே எண்ணில் நடைபெறும் மோசடிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.