சென்னை
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கையாளுவது எப்படி?- ஆலோசனை
|சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கையாளுவது எப்படி? என்பது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் மாநகரின் போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் உள்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மெட்ரோ ரெயில் நிர்வாகம், குடிநீர் வாரியம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் சாலை சீரமைப்பு மற்றும் மேம்பாடு, போக்குவரத்து ஒழுங்கமைவு மற்றும் போக்குவரத்து மேலாண்மை, நடைபாதை கடைகள் மற்றும் துரித உணவகங்களை ஒழுங்குபடுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்த நீண்ட மற்றும் மத்திய கால வழிமுறைகள் உருவாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதோடு சென்னை சாலைகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பருவமழைக்காலம் தொடங்கும் முன்பாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு, அவற்றுக்கு இணையான மாற்றுச் சாலைகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.
சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அவை மூடப்படாமல் விடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சீர்கேடுகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மாநகராட்சி, மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டம், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு ஆகிய துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இக்குழு, சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதிச் சான்று வேண்டும் நிகழ்வுகளில், ஒற்றைச் சாளர முறையில், இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, பள்ளம் தோண்டும் இடம், காரணம், பணி முடிக்க தேவைப்படும் கால அளவு, பணி முடித்த பின்னர் சாலை சீரமைக்கும் பணி ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்விவரங்கள் உள்ளடக்கிய அனுமதிச் சான்று வழங்கும். இதற்கான செயலி மாநகராட்சியால் விரைவில் உருவாக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, வாகன நிறுத்தம் தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரன்முறை செய்தலை கண்காணிக்க உயர்மட்டக் குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இக்குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரெயில் திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் சென்னை பெருநகர போக்குவரத்து மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.