விருதுநகர்
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை துறை அதிகாரி விளக்கம்
|ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
படைப்புழு தாக்குதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மக்காச்சோளம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், கரும்பு, சோளம், பருத்தி, நிலக்கடலை போன்ற 80 வகையான பயிர்களை தாக்கக்கூடியது. இப்பயிரில் இளம் இலைகளின் அடிப்பகுதியில் முட்டை குவியல்கள் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும். இதனால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுகிறது.
மக்காச்சோளம் சாகுபடிக்கு முன் கட்டாயம் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு வெயில், பறவைகளால் அழிக்கப்படுகிறது. விதைப்பின் போது கடைசி உழவில் உரத்துடன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பயிரின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 பறவை தாங்கிகள் வைக்கலாம். மேலும் 5 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் வாயிலாக இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தலாம்.
ஊடு பயிர்
விதைப்பின் போது ஊடுபயிராக பயிறுவகை சூரியகாந்தி பயிர்களை கட்டாயம் பயிரிட வேண்டும். பயிரிட்டு 15 நாள் பயிராக இருக்கும் போது வேப்பங்கொட்டை சாறு அல்லது வேம்பு பூச்சி கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் அல்லது ஒரு எக்டேருக்கு அசாடிராக்டின் 2.5 லி அல்லது குளோரான்ட்ரைலிப்ரோல் 250 மில்லி அல்லது ப்ளூபெண்டியமைடு 250 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். 25 நாள் முதல் 35 நாட்களுக்குள் தாக்குதல் தென்பட்டால் மெட்டாரைசியம் பூஞ்சாணம் 500 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியில் 435 முதல் 50 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டீன் பென்சோயேட் 4 கிராம், 10 லிட்டர் நீர் அல்லது நோவலூரான் 750 மில்லி 15 மில்லி 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து குருத்து நனையும் படி தெளிக்க வேண்டும்.
கைத்தெளிப்பான் வழியாக மருந்து தெளிப்பதே மிகவும் நன்றாக கட்டுப்படுத்தும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இந்த தகவலை வேளாண்மை துறை அதிகாரி தனலட்சுமி தெரிவித்துள்ளார்.