< Back
மாநில செய்திகள்
கரும்பு பயிரில் மாவு பூச்சி தாக்குதல், குருத்து அழுகுதலை கட்டுப்படுத்துவது எப்படி?விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கம்
கடலூர்
மாநில செய்திகள்

கரும்பு பயிரில் மாவு பூச்சி தாக்குதல், குருத்து அழுகுதலை கட்டுப்படுத்துவது எப்படி?விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கம்

தினத்தந்தி
|
18 July 2023 12:18 AM IST

கரும்பு பயிரில் மாவு பூச்சி தாக்குதல் மற்றும் குருத்து அழுகுதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

விருத்தாசலம்,

1,350 ஹெக்டேர் கரும்பு

விருத்தாசலம் வட்டாரத்தில் 1,350 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி கிராமத்தில் கரும்பு பயிரில் நோய் தாக்குதல் இருந்ததால் அதுபற்றி விவசாயிகள் விருத்தாசலம் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் ராஜீவ் காந்தி ஆகியோர் நேரில்ஆய்வு செய்தனர். அப்போது கரும்பு பயிரில் பொக்கா போயிங் நோய் தாக்குதல் பரவலாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியதாவது:-

கட்டுப்படுத்தும் முறை

கரும்பு பயிரில் நுனி குருத்து அழுகுதல் என்ற பொக்கா போயிங் நோய் தாக்கி இருந்தால் பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும். குருத்துப்பகுதி அழுகி காய்ந்து விடும். குருத்து மற்றும் அதன் அருகில் மாவு பூச்சி அதிகம் காணப்படும். எரும்புகள் நடமாட்டமும் அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த காய்ந்த தோகையை அகற்ற வேண்டும். புரோபிகோனசால் 1 மி.லி., இமிட்டோகுளோபிரிட் 17.8 எஸ்.சி. 0.3 மிலி, ஒட்டும் திரவம் 1 மி.லி. இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து (ஏக்கருக்கு 300 லிட்டர் தண்ணீர்) தெளித்து கட்டுப்படுத்தலாம். மீண்டும் 20 நாள் இடைவெளியில் ஒரு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம். டி.என்.ஏ.யு. கரும்பு பூஸ்டரை கரும்பு நடவு செய்த 45-வது நாளில் ஒரு கிலோ, 60-வது நாளில் 1.5 கிலோ, 75-வது நாளில் 2 கிலோ என கைத்தெளிப்பான் மூலம் தெளித்து பயிரின் வளர்ச்சியை அதிகரித்து பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்