< Back
மாநில செய்திகள்
இந்தியாவா, பாரதமா எப்படி அழைப்பது?-சமூக ஆர்வலர்கள் கருத்து
பெரம்பலூர்
மாநில செய்திகள்

இந்தியாவா, பாரதமா எப்படி அழைப்பது?-சமூக ஆர்வலர்கள் கருத்து

தினத்தந்தி
|
8 Sept 2023 12:50 AM IST

‘சிந்துஸ்தான்' என்றும், ‘இந்துஸ்தான்' என்றும் அழைக்கப்பட்டு வந்த சிந்து நதிக்கரைப்பகுதி, பின்னர் மருவி ‘இந்தியா' ஆனது. புராண, இதிகாசங்களில் அது ‘பரத கண்டம்' என்று அழைக்கப்படுகிறது.

ஜி-20 மாநாடு

தற்போது இந்தியா என்ற பெயர் பாரத் என்று மாறுவதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி இருக்கின்றன. டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி-20 மாநாட்டையொட்டி விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக 'பாரத குடியரசு தலைவர்' என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இதுவே அந்த அறிகுறிகளை உறுதி செய்வதாக அமைந்து இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் மத்தியில் தற்போது விவாதப்பொருளாகவும் அது மாறி உள்ளது. பெயர் மாற்றம் தேவையா? அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த குறுகிய கால இடைவெளியில் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் இதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்? என்று குறைகூறுகிறார்கள்.

அதே நேரம் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பெயர் மாற்றம் சரியே என்கிறார்கள். அதுபற்றி வக்கீல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்:-

பாரதியார் பேத்தி பெருமிதம்

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் தங்கை தங்கம்மாளின் கொள்ளு பேத்தி டாக்டர் இரா.உமாபாரதி:- 'உலக வரைபடத்தை குறிக்கும் போது ஆசிய கண்டத்தில் நம் நாட்டை 'பரத கண்டம்' என்று தான் ஆங்கிலேயர்கள் குறித்திருந்தனர். இந்த 'பரத கண்டத்தில் நம்முடைய தாய் திருநாடு இருப்பதால் நாம்நாட்டின் இயற்பெயரே 'பாரதம்' தான். என்னுடைய பெரிய தாத்தா பாரதியார் அவருடைய பல பாடல்களில் அன்றே கூறி சென்றுள்ளார். குறிப்பாக, 'பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார் துயர்ப் பகைவெல்லு வார்' என்று பாடினார். அதேபோல், 'வாழிய செந்தமிழ், வாழ்கநற் றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு' என்றும், 'பாரதப் பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்' உள்பட பல்வேறு பாடல்களை நம் நாட்டை பாரதம் என்று புகழ்ந்து பாடி சென்றுள்ளார். பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சி இப்போதாவது நடந்திருப்பதை நினைத்து எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பெருமை கொள்கிறோம். இதனை இப்போதாவது நிறைவேற்ற இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். இதனை மனதார வரவேற்று பெருமிதம் கொள்கிறேன்'.

பெயரை மாற்றுவதில் தவறில்லை

பெரம்பலூர் அருகே செங்குணத்தை சேர்ந்த வக்கீல் ஹரிராமன் ஆண்டிமுத்து:- தற்போது நம் நாட்டின் பெயர் இந்தியாவா? அல்லது பாரதமா? என்று இப்போது அனைவரிடத்திலும் மிகப்பெரிய சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதலாவது அத்தியாயத்தில் இந்தியா என்றாலும், பாரத் என்றாலும் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எத்தனை நாடுகள் காலத்திற்கு ஏற்ப, தன்மைக்கு ஏற்ப தங்களது நாடுகளின் பெயர்களை மாற்றியுள்ளனர். நமது நாட்டிலும் பல மாநிலங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. சில மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணா கூறியது போல் மல்லிகை பூவுக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தாலும் மணக்கத்தான் செய்யும் என்பது போல் நாட்டின் பெயர் இந்தியா என்றாலும், பாரத் என்றாலும் நமது நாட்டின் திறமையும், புகழும் ஒரு நாளும் மங்காது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவது தவறில்லை.

பிரிவினையை ஏற்படுத்தும்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த செந்தில்குமார்:-

நமது நாட்டின் பெயர் இந்தியா என்று இருப்பதால் நாட்டின் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். காரணமின்றி நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவது தேவையில்லாதது. இது மக்களிடையே குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்தும். தனது தாயின் பெயரை மாற்ற எவரும் விரும்ப மாட்டார். அது போல் இந்தியா என்ற பெயரை மாற்ற நாட்டின் மக்களும் விரும்பவில்லை. இந்தியா என்ற பெயர் நாட்டின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்டது, அதனை பிரிக்க முடியாது. நாட்டின் பெயரை மாற்றுவது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்