பெரம்பலூர்
மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?-அதிகாரி தகவல்
|மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரி கூறியதாவது:-
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில், மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தங்களது பகுதியில் அமைந்துள்ள மின்கட்டமைப்புகளில் தன்னிச்சையாக ஏறி பழுது நீக்கம் செய்யக்கூடாது. மின்சாரம் தொடர்பான எந்த ஒரு வேலைக்கும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவாரணம் பெற வேண்டும். பொதுமக்கள் வீடுகள் மற்றும் அலுவலகத்திலுள்ள மின்சாதனங்களை கவனத்துடன் கையாள வேண்டும். மேலும் அனைத்து வீடுகளிலும் மின்சார சர்க்கியூட் பிரேக்கர் கட்டாயம் பொருத்தி மின்விபத்தினை தவிர்க்க வேண்டும். மின்வாரிய வலைதளம், டான்ஜெட்கோ செயலி, ஜிபே, போன்பே, பேடி.எம். போன்ற நம்பகமான செயலிகளின் மூலம் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் தங்களது மொபெல் எண்ணுக்கு வரும் எந்த ஒரு எஸ்.எம்.எஸ். மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள வலைதொடர்பு லிங்கை தொடர வேண்டாம். இது தொடர்பாக ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக 1930-ஐ தொடர்பு கொண்டு கணினி குற்ற பிரிவிற்கு தகவல் தெரிவிக்கவும். மின்கட்டணம் வசூலிப்பதாக யாரேனும் போலியான நபர்கள் அணுகினால், அவர்களிடம் தொகை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் மின்சார தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் மின்னகம் புகார் மையத்திற்கு 94987 94987 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்குமாறு பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்துள்ளார்.