வன கிராம மக்கள் மறுவாழ்வுக்கு எவ்வளவு நிதி உள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|வன கிராம மக்களின் மறுவாழ்வுத் திட்டத்துக்காக மத்திய அரசிடம் எவ்வளவு நிதி உள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், வனம், வன விலங்குகள், வனப்பகுதி சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நீதிபதிகள் முன்பு நேற்று வனம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் உள்ள தெங்குமரஹாடா என்ற வன கிராமத்தில் உள்ளவர்களை இடமாற்றுவது குறித்து நீதிபதிகள் விசாரித்தனர்.
ஐகோர்ட்டுக்கு உதவும் விதமாக நியமிக்கப்பட்ட வக்கீல், 'இந்த கிராமத்தில் உள்ள காப்புக்காடு கூட்டுறவு சங்கம் மூலம் சிலர் குத்தகைக்கு எடுத்து உள்ளனர். அதில் பலர் குத்தகை நிலத்தில் இல்லை. வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விட்டுள்ளனர். இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செல்லும் பாதையில் உள்ளன. இங்குள்ளவர்களில் சிலர் இழப்பீடு கிடைத்தால், வெளியேறுவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்க 75 கோடி ரூபாய் செலவு ஆகும். இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்'' என்றார்.
சிறந்த இடம்
அப்போது நீதிபதிகள், உலகிலேயே புலிகள் இனப்பெருக்கத்துக்கு சிறந்த இடம் இந்த தெங்குமரஹாடா வனப்பகுதிதான் என்பதை மத்திய வனத்துறை அதிகாரிகள் அறிவார்களா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது ஆன்லைன் வாயிலாக ஆஜராகி இருந்த மத்திய அரசின் வனத்துறை ஐ.ஜி.கள், அதை ஒப்புக் கொண்டனர்.
பின்னர், 'வனப்பகுதியில் சாலை உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளும்போது, வனத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இழப்பீடு வசூலிக்கப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையில், 90 சதவீதம் அந்தந்த மாநிலங்களுக்கு செலவு செய்யப்படும். 10 சதவீதம் மட்டும் 'கேம்ப்' மத்திய அரசு துறையில் வைத்திருக்கப்படும். அந்த நிதி வன கிராம மக்களின் மறுவாழ்வு உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்யப்படும்'' என்று அதிகாரிகள் கூறினர்.
எவ்வளவு நிதி?
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''தெங்குமரஹாடா வன கிராமத்தில் உள்ளவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.75 கோடி இழப்பீடு வழங்க தேவைப்படுகிறது. நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசில் அதிகாரிகள் குழு உள்ளன'' என்றார்.
இதையடுத்து, வன கிராம மக்கள் மறுவாழ்வு திட்டத்துக்காக மத்திய அரசிடம் எவ்வளவு நிதி உள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.