1 கிலோ பூண்டு இவ்வளவு விலையா? குமுறும் இல்லத்தரசிகள்
|சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
நமது அன்றாட சைவ, அசைவ சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பூண்டு. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.
இதேபோல, கோத்தகிரி, மஞ்சூர், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்யும் வகையில் பிற மாநிலங்களில் இருந்தும் பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒருகிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை அதிகரித்துள்ளதால் சில்லறை வியாபாரிகளும், இல்லத்தரசிகளும் கவலை அடைந்துள்ளனர்.