சென்னை
2023-ம் ஆண்டில் நிரப்பப்படும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
|2023-ம் ஆண்டில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டு இருக்கிறது.
பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்கள் எவ்வளவு? அதற்கு அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? அதற்கான தேர்வு எப்போது நடக்கும் என்பது தொடர்பான முழு விவரங்களுடன் கூடிய ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.
அதன்படி, 2023-ம் ஆண்டில் மொத்தம் 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்கள் அடங்கிய ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரங்கள் வருமாறு:-
4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள்
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடக்கும்.
* வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் காலியாக இருக்கும் 23 இடங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும்.
* இடைநிலை ஆசிரியர் பணிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 553 இடங்களுக்கு (தமிழ்-6,304, தெலுங்கு- 133, கன்னடம்- 3, உருது- 113) மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு, மே மாதத்தில் தேர்வும் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
* 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
* அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருக்கும் 493 இடங்களுக்கு மே மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், தேர்வு ஆகஸ்டு மாதத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
* அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதோடு, செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடக்க இருக்கிறது.
* அரசு சட்டக்கல்லூரியில் இருக்கும் 129 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகிறது. இதற்கான தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
* 267 உதவி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டு, நவம்பர் மாதத்தில் அதற்கான தேர்வு நடக்க உள்ளது.
* அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2-க்கான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது. தேர்வு 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது.