தாம்பரத்தில் 'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் எவ்வளவு நேரம் நின்று செல்லும்? - தெற்குரெயில்வே விளக்கம்
|தாம்பரம் ரெயில்நிலையத்தில்'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் எவ்வளவு நேரம் நின்று செல்லும் என்பது குறித்து தெற்குரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாக மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த நிலையில், தேஜஸ் ரெயில் தாம்பரம் ரெயில்நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, மத்திய இணை மந்திரி எல்.முருகன் கடந்த ஜனவரி மாதம், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இந்தநிலையில், சென்னை-எழும்பூர்-மதுரை இருமார்க்கத்திலும் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 26-ந்தேதி (இன்று) முதல் 6 மாதம் சோதனை அடிப்படையில் தாம்பரம் ரெயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்தது.
ரெயில்வே வாரியத்தின் அறிவிப்பை தொடர்ந்து இன்று முதல் தாம்பரம் ரெயில்நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்லும். காலை 6.25 மணி முதல் 6.27 மணி வரையும், இரவு 8.38 மணி முதல் 8.40 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதேபோல, புதிய நிறுத்தமான தாம்பரம் ரெயில்நிலையத்தில் இன்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை காலை 6.25 மணிக்கு கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.பாலு எம்.பி., தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.