விருதுநகர்
அரசு, மாநகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?
|அரசு, மாநகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி? என்பது கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
10-ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். 10 சதவீதம் மாணவர்கள், சாலை ஓரங்களில் வசிப்பவர்களின் பிள்ளைகள். சுமார் 18 சதவீதம் மாணவர்களே நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்கள், 2 சதவீதம் மாணவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுயதொழில் செய்பவர்களின் பிள்ளைகள்.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வரும் இப்பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன என்பது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கல்வி தரம்
சிவகாசிைய சேர்ந்த சமூக ஆர்வலர் நிர்மல்குமார்:- சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் குறைவான அரசு பள்ளிகள் தான் இயங்கி வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க தயங்கும்நிலை உள்ளது.
அரசு பள்ளிகள் மீது உள்ள அவநம்பிக்கையை போற்றி அதன் தரத்தை உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதல் இடம் பெற அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இது வெற்றி சதவீதத்தை பாதித்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோல் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடையும் வகையில் தரத்தினை உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்க வேண்டும். அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து ஏழை, நடுத்தர மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் போது 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு இருப்பதை சுட்டிகாட்டி படிக்க வைக்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரியில் படிக்க முன்னுரிமை வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் கடமை
சிவகாசியை சேர்ந்த திலகபாமா:- பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்த பல அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடுத்து வரும் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் மாவட்டம் முழுவதும் உள்ள சேதமடைந்துள்ள பள்ளிகளை சீரமைக்க தேவையான நடவடிக்கையை கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
மேலும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து கல்வியில் பல சாதனைகளை படைத்து வரும் விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் இனி வரும் காலங்களிலும் சாதனை செய்ய வசதியாக அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.
அடிப்படை வசதி
தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புலிக்குறிச்சியில் 164 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதலாக 2 வகுப்புகளுக்கு பள்ளி கட்டிடம் தேவைப்படுகிறது.
இங்கு முறையான கழிப்பறை வசதி இல்லை. மாணவர்களுக்கு தேவையான கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்ளன. அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
தூய்மை பணியாளர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் என்ஜினீயர் ராம்ஜி:-
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு போட்டியிடும் வகையில் வகுப்பறைகள் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட வேண்டும். பழைய கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும், மேலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
விளையாட்டு மைதானம்
தளவாய்புரத்தை சேர்ந்த கருப்பசாமி:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே தான் செல்கிறது. காரணம் அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை என்பதே கசப்பான உண்மை. பள்ளிகளில் வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை. இவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவிகள் தயக்கம்
தாயில்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி:-
மேலதாயில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கழிப்பறை கட்டிடம் அருகில் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.
இதனால் கழிப்பறை கட்டிடத்தை பயன்படுத்த மாணவிகள் தயங்குகின்றனர். ஆகையால் கூடுதல் கழிப்பறை கட்டிடம், சேதமடைந்த சுற்றுச்சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. பள்ளி திறக்க சில நாட்களே இருப்பதால் உடனடியாக இந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு கூடம்
வடமலைகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி:-
விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சி கிராமத்தில் யூனியன் தொடக்கப்பள்ளி சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த பள்ளி வளாகத்தில் ஏற்கனவே 2 வகுப்பறை கட்டிடங்களின் மராமத்து பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் மேலும் கட்டிடங்களை சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. அதேபோல சத்துணவுக்கூடமும் மராமத்து செய்ய வேண்டி உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற உள்ளது. கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டது.
பெற்றோர் அச்சம்
அல்லாளப்பேரியை சேர்ந்த முத்துராமலிங்கம்:- காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். ஏனென்றால் இந்த பகுதி மக்கள் முழுவதும் விவசாய பெருங்குடி மக்களாகும். இதனால் தங்கள் குடும்ப வறுமையின் காரணமாக அரசு பள்ளியை நாடி படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது இந்த பள்ளியில் மாணவிகளும் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 12 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் தற்போது பள்ளி கட்டிடம் முழுவதும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் பெற்றோர் இந்த பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
கல்வி உபகரணங்கள்
ஆசிரியர் சண்முகவேல்:-
அரசு பள்ளிகள் கழிவறை வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளுடன் நல்ல கட்டமைப்புடன் உள்ளது. அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
உயர்தர ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் கல்வித்துறை வழங்கி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் அரசு பள்ளியில் உள்ளது.
முன்மாதிரி பள்ளி
பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருச்செல்வராஜா:-
எங்கள் பள்ளியில் 207 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 வகுப்பறை கட்டிடங்கள் டிஜிட்டல் வகுப்பறை, உயர்தொழில் நுட்ப ஆய்வகம், நவீன சுகாதார வளாகம், நீரூற்று என பள்ளி வளாகத்தை பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளை போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து முன்மாதிரி பள்ளியாக இந்த பள்ளி விளங்குகிறது.
முன்னுரிமை
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளது. ஆனாலும் சேதமடைந்த கழிப்பறைகளை மராமத்து செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லை.
அதற்கு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமீபத்தில் முதல்-அமைச்சர் பள்ளி கட்டிட மேம்பாட்டிற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் மாவட்டத்தில் 9 பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும்போது எந்த பள்ளிகளில் மாணவர்கள் போதிய வகுப்பறை இல்லாமல் சமுதாயக்கூடங்களிலும், திறந்தவெளியிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் வகுப்புகள் நடத்தும் நிலை உள்ளதோ அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமையளித்து வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.